தொடர்சியாக எச்சரிக்கை ஒளி சமிக்ஞையால் அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்

IMG20220302143640 01
IMG20220302143640 01

வவுனியா தாண்டிக்குளம் சந்தியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள ஒளி சமிஞ்சை இன்று (02) பிற்பகல் முதல் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக பயணம் செய்யும் ஊர் பொதுமக்கள் அச்சத்துடன் பயணத்தை தொடர வேண்டிய அசௌகரியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து குறித்த பகுதியிலுள்ள சிவப்பு விளக்கு தொடர்ச்சியாக ஒளிர்ந்தபடி உள்ளது. இதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைவிட்டு செல்வோர், மாலை வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருவதாக எண்ணி நீண்ட நேரம் காவல் நின்று தமது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 குறித்த கடவையில் இவ்வாறான கோளாறு முன்பும் ஏற்பட்டு சீர்செய்யப்பட்டிருந்தது. அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்ற இக் கடவையில் அடிக்கடி இவ்வாறான கோளாறுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை நிரந்தரமாக சீர்செய்ய வேண்டும் என அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த கடவையில் பல்வேறு விபத்து சம்பவங்கள் பதிவாகியிருக்கின்ற நிலையில் புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவரும் மரணமடைந்திருந்தார்.

வவுனியா, தாண்டிக்குளம் சந்தியானது கடந்த காலத்தில் இருந்து தற்பொழுது வரை அதிக போக்குவரத்து நெரிசல் உடைய இடமாகும். கல்மடு, ஈச்சங்குளம், புதுக்குளம் போன்ற பல கிராமங்களை சேர்ந்தவர்களும் குருமன்காடு, தாண்டிக்குளம் போன்ற நகரை அண்டிய இடங்களில் உள்ளவர்களும் ஏ9 வீதியை பயன்படுத்துகின்றனர். அத்துடன் இவ்வாறு செல்பவர்கள் இவ் புகையிரத கடவையின் ஊடாகவே ஏ9 வீதியை அடைகின்றனர்.அத்துடன் இக்கடவைக்கு மிக அண்மையில் பாடசாலை அமைந்துள்ளதுடன் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் இக்கடவையின் ஊடாகவே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.