இலங்கை தமிழரசுகட்சியின் தீர்மானத்துக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை!

IMG 20220409 WA0002
IMG 20220409 WA0002

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி பதில் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ்மாவட்ட நீதிமற்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   

அவரின் மனுவிற்கு ஆதரவாக சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜராகியிருந்தார், பிரதி வாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்த மனுவை நேற்று (08/04/2022) யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்த நீதிபதி சசிதரன் அவர்கள் இன்றில் இருந்து 14 நாட்களுக்கு எதிர்வரும் (22/04/2022) வரை பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் 14, நாட்களுக்குள் அவரை கட்சியில் இருந்து நீக்கியமைக்கான விளக்கத்தை யாழ்பாண நீதிமன்றில் சமர்பிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

இது விடயமாக கருத்து தெரிவித்த பீற்றர் இளஞ்செழியன் தாம் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுள்கால உறுப்பினராகவும்,  இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் இணை  பொருளாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக உறுப்பினராகவும் பல வருடங்களாக இலங்கை தமிழரசுகட்சியின் வளர்ச்சிக்காக அற்பணிப்புடன் செயலாற்றும்போது தாம் எந்த தவறுகளும் கட்சியில் செய்யாதபோது என்னிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியமை கட்சி உபவிதிக்கு முரணான செயல் என்பதால் தாம் நீதிமன்றத்தை நாடியதாக கூறினார்.