ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை முன்னெடுக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நிபந்தனை

vimal
vimal

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியில் இருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள் ஒன்றிணைந்து, தற்சமயம் கொழும்பு நடத்தும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இயக்கும் குழுவினர், தற்போது தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று, வரப்பிரசாதங்களை வழங்கி, மீண்டும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி முதலான கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாரெனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய விவசாய இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நேற்று முன்தினம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 5 ஆம் திகதி, அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவும் உள்ளடங்கியிருந்தார்.

இந்நிலையில், சாந்த பண்டாரவின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.