இணையவழியாக இன்று பிற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

MAHINDA YAPA 700x375 1
MAHINDA YAPA 700x375 1

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (11) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை ஸூம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இவ்வாறு இணையவழியாக இந்த கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு தீர்வு காணப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை மீண்டும் விசேடமாக நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தையும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஜீவன் தொண்டமான், சுமந்திரன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், இணையவழியாக கட்சித்தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.