உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி ஒன்றிய மாணவர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்!

1653124698 1653124318 kadu L
1653124698 1653124318 kadu L

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி (HND) மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கொழும்பு – கோட்டை, இலங்கை வங்கி வீதியில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருவதாக எமது நிருபர் தெரிவித்தார்.

கொழும்பு – கோட்டை, உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதிக்கு அருகில், இலங்கை வங்கி மாவத்தைக்குள் வீதித் தடைகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரவேசிக்க முயற்சித்தபோது, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக, குறித்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் மருதானை தொழில்நுட்ப சந்திக்கு அருகில், அவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர்.

பின்னர், அவர்கள் பேரணியாக கொழும்பு – கோட்டை பகுதியை அடைந்தனர்.

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களுக்கு, இன்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்குட்பட்ட வீதிகள் சிலவற்றுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பல வீதிகள், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கொழும்பு – கோட்டை  நீதவான் மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு – கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி விடுத்து கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சைத்திய வீதி, பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கெனல் ரோட், ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி, செரமிக் சந்தி, இலங்கை வங்கி மாவத்தை, செத்தம் வீதி, முதலிகே மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது