மே 20 அன்று சாணக்கியன் ஆற்றிய உரையை மீளபெற வேண்டுமென ரணில் சபையில் தெரிவிப்பு

ranil 1
ranil 1

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரைக்கு கவலை வெளியிட்டு, அதனை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.

இல்லாவிட்டால், சபாநாயகர் அதனை உரிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் கோரினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல சடலமாக மீட்கப்பட்டார்.

அத்துடன், அவரின் பாதுகாவலரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையானது, அவரின் குடும்பத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டார். அது நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்படுவாராயின், அது நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும்.

ஏன் இந்த சம்பவம் இடம்பெற்றது? அவர் ஏன் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

காவல்துறை உத்தியோகத்தரை ஏன் கொலை செய்தனர்? இதனை யார் செய்தார்கள் என்பது குறித்து விசாரணை இடம்பெறுகின்றமையால், தாம் அது குறித்து மேலதிக கருத்து வெளியிடப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது என்ன நடந்தது என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கையில் அதனை செய்வது குறித்து பிரச்சினை இருக்குமாயின், காலிமுகத்திடல் சம்பவம் குறித்தும் விசாரிக்குமாறு, பொதுநலவாய நாடாளுமன்ற செயலாளருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சபையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில், அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு கவலை தெரிவித்தனர்.

எனினும், ஒருவர் அதனைச் செய்யவில்லை. அதனை ஆதரித்தார். அதுவே தமது கவலையாகும் என பிரதமர் குறிப்பிட்டார். மே மாதம் 20 ஆம் திகதி ஹண்சார்ட் அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியிருந்ததை நான் இங்குக் குறிப்பிடுகின்றேன்.

20 ஆம் திருத்தம் போன்ற நாட்டுக்கு தீங்கிளைக்கும் விடயத்திற்கு வாக்களித்தமையால்தான் வீடுகளுக்கு தீ வைத்தனர். அதாவது, எதிர்க்கருத்து உள்ளமையால் வீடுகளுக்கு தீவைத்தனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் பாதீடுகளில் தவறான பொருளாதார கொள்கைகள் இருந்தன.

அவற்றுக்கு கையுயர்த்தியவர்களினால்தான் வீடுகளுக்கு தீ வைத்தனர். மக்களின் எண்ணங்களைக் காட்டிக்கொடுத்தமையால்தான், அவர்களுக்கு அப்படி நடந்தது என்பதை நினைவிற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வாறு இப்படி பேச முடியும்? லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது, அவரை விமர்சித்து புலிகள் அமைப்பினர் வெளியே கருத்து வெளியிட்டனர்.

ஆனால், இப்போது உள்ளேயே அதனை செய்கின்றனர். இதன் அர்த்தம் என்ன? அப்படியென்றால் வீடுகள் தீ வைக்கப்பட்டதை அவர் அனுமதிக்கிறாரா? இந்த மரணத்தை அவர் அனுமதிக்கிறாரா? குமார வெல்கம தாக்கப்பட்டதை அனுமதிக்கிறாரா? என்பதை இந்த சபையில் அதனை கேட்கவேண்டி உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்தபோது, அங்குவந்து தங்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறினார்.

அடுத்தநாள் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னதுடன் இருக்கும் படம் உள்ளது. முன்னிலை சோசலிக் கட்சி, ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்கு எவரும் எதிர்ப்பு இல்லை.

அதற்கு அப்பால் சென்றால்? இதுதானா இந்த நாடாளுமன்றில் நடக்கிறது? எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வு நிறைவடைவதற்குள் அவர் கவலை தெரிவித்து, இதனை மீளப்பெறாவிட்டால், சபாநாயகர் அதனை உரிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தி விசாரித்து தங்களுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

அத்துடன், இதுபோன்று இந்தச் சபையில் நடக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்போது சபாபீடத்திற்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பிரதமரின் கருத்து குறித்து விசேடமாக ஆராய்ந்து செயற்படுவது தொடர்பில் சபாநாயகருக்கு தாம் அறியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.