பெண்கள் – வயோதிபர்களிடம் தங்க ஆபரணங்களை களவாடிய இருவர் கைது!

kaithu
kaithu

யாழ்ப்பாணத்தில், நீண்ட நாட்களாக பெண்கள் மற்றும் வயோதிபர்களிடமிருந்து தங்க ஆபரணங்களை களவாடும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர், மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காவல்துறையினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைதுசெய்யப்படாதிருந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.

நாவற்குழி மற்றும் அல்வாய் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு உந்துருளிகளும், 3 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தங்க ஆபரண விற்பனையக உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.