பயணிகளுக்கு எந்த பயனையும் வழங்க முடியாது – கெமுனு விஜேரத்ன

gemunu wijeratna
gemunu wijeratna

ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும் அதன் பயனை பயணிகளுக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள பேருந்துக் கட்டணங்களுக்கான கட்டண சதவீதத்தைக் கணக்கிடுவது இன்னும் கடினமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.

பேருந்து கட்டண திருத்தம் குறித்து கருத்தில் கொள்ள ஒரு லீற்றர் டீசலின் விலையை 4% அல்லது அதற்கும் அதிகமாக குறைக்க வேண்டும்.

எனினும், அண்மைய விலை குறைப்பு 2 சதவீதத்தை அண்மித்ததாக இருந்ததாகவும், இது கட்டண திருத்தம் செய்வதற்கு போதுமானதாக இல்லை எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

“சேவையை முன்னெடுக்க போதுமான எரிபொருள் கிடைத்தது. நாங்கள் இப்போது முழுமையான சேவையை வழங்குகிறோம்,” என்கிறார்.
 
“ தொடரூந்து சேவைகள் இயங்கினாலும் இல்லாவிட்டாலும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் தொடரூந்து மிகவும் தாமதம் நிலவுகிறது. மக்கள் உரிய நேரத்தில் தங்கள் இலக்குகளை அடைய முடியாது.

இதன் காரணமாக பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தனியார் பேருந்து சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆனால், தற்போது டொலருக்கு பதிலாக இந்திய நாணயத்தை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

முயற்சி வெற்றி பெற்றால்,  பேரூந்து கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம். தற்போதைய பேரூந்து கட்டணம் மிக அதிக அளவில் உள்ளது.

எவ்வாறாயினும், இறக்குமதி தொடங்கும் போதே அதனை குறைக்க முடியும்” என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.