டக்ளஸ் தேவானந்தா மட்டு விஜயம்

daglas
daglas

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலிற்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவட்ட நிருவாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றிக்காக அவருடன் கூட்டணி அமைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா தமிழர் தாயகத்தில் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பில் நடாத்திய விசேட கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றியிருந்தார்.

அக்கூட்டத்தில் உரையாற்றிய தேவானந்தா தமிழ் மக்களின் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களால் தங்களது அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

தான் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வரும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் தற்போதைய சூழலில் இருப்பதாகவும் மாகாண சபைகளுக்கு ஒரு மேல்சபை அமைத்து அந்த மேல் சபை இலங்கை பாராளுமன்றத்தைப் போன்று பெரும்பான்மை சமூகமான சிங்கள இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஐம்பதுக்கு ஐம்பது சிறுபான்மையினரையும் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் மட்டக்களப்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதுடன் அரசியல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதா குறிப்பிடப்படுகிறது.