2/3 பெரும்பான்மை நாட்டுக்கு நல்லதல்ல!

20200111 235650
20200111 235650

எந்தவொரு கூட்டணியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத வகையில் புதிய நாடாளுமன்றம் அமைவதே நாட்டுக்கு ஆரோக்கியமானதாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரில் தனது கொள்கைப் பிரகடன உரையில் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் அவசியமென்றும், தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவையென்றும் குறிப்பிட்டிருந்தார்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலுள்ள சாதகமான பண்புகளைப் பாதுகாக்கும் அதேவேளை, நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இலக்கங்களால் தேர்தல்களை வெல்ல முடியுமாக இருப்பினும், தெளிவான தீர்மானங்களை எடுக்கமுடியாத அடிப்படைவாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்தும் கீழ்ப்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் ஒரு நாட்டிற்குப் பொருந்தாது.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துகளை வலுப்படுத்துவது போல ஆளுந்தரப்பை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவும் தேர்தல் முறை தொடர்பில் மாற்றங்களைக் கோரும் தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளியை 5 வீதத்திலிருந்து 12.5 வீதமாக மாற்றியமைக்க அவர் பிரேரித்துள்ளார்.

நாட்டினது பன்மைத்துவத்தையும், அர்த்தபூர்வமான ஜனநாயகப் பண்புகளையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேயே தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
அதற்கு மறுதலையாக, பெரும்பான்மைவாத மனோநிலையோடு வெளிவரும் இவ்வாறான ஒருதலைப்பட்சமான திருத்த யோசனைகள் நிராகரிக்கப்பட வேண்டும்.

அவை நாட்டின் நீண்டகால நலன்களுக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கும் பரஸ்பர நல்லிணக்கத்திற்கும் பாதகமாக அமைந்துவிடும்” என தெரிவிககபபட்டுள்ளது.

கொழும்பில் கூடிய கட்சியின் தேசிய செயற்குழு இது தொடர்பில் ஆராய்ந்து, புதிய நாடாளுமன்றத்தை ஜனநாயக ரீதியிலும், நாட்டின் அரசியல் சமநிலையைப் பேணும் வகையிலும் பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்ததுள்ளது.

எந்தவொரு கூட்டணியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத வகையில் புதிய நாடாளுமன்றம் அமைவதே நாட்டுக்கு ஆரோக்கியமானதாகும் என ந.தே.மு
மேலும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா,கண்டி, குருநாகல், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, பொலன்னறுவை, வன்னி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட வேண்டுமெனவும் கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.