சோலைவரி அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் உண்ணாவிரதம்!

IMG 0821
IMG 0821

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை அளவுக்கு அதிகமாக 10% சோலைவரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமி மகேந்திரன் என்பவர் தலைமையில் இன்று (23) உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி தமிழ்க்கங்கை ஹாட்வெயார் அன்ட் வண்ணச்சோலையின் உரிமையாளர் குமாரசாமி மகேந்திரன் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

“பத்து சதவிகித அதிகரித்த சோலை வரியிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போராட்டம் எனது தனிப்பட்ட முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எதுவித அரசியல் கலப்புக்களும் உள்வாங்கப்படவில்லை.

இதேவேளை கடந்த காலங்களில் 10 சதவிகித அதிகரித்த சோலை வரியினை 4 சதவிகிதமாக குறைப்பதற்கு பிரதேச சபையிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆயினும் இது தொடர்பில் பிரதேச சபையினர் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களை பொறுத்த மட்டில் குறைந்தளவான சோலை வரியே அறவிடப்பட்டு வருகின்றது. ஆனால் கரைச்சி பிரதேச சபையை பொறுத்த மட்டில் 10 சதவிகிதமாக அதிகரித்த சோலைவரி அறவிட்டு வருவதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காதவிடத்து இப்போராட்டம் தொடர்ந்தும் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன.