வெறுப்புச் சட்டத்தை கொண்டு வருமாறு ஹாரிஸ் எம்.பி வலியுறுத்து

FB IMG 1579713875290 1
FB IMG 1579713875290 1

தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை கேள்விக்கு உட்படுத்துகின்ற கீழ்த்தரமான பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் வெறுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணா அம்மான் அவர்கள் மிகக் கேவலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத பேச்சுக்களை அப்பட்டமாக பேசித் திரிகின்றார்.

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை மிகவும் கேள்விக்கு உட்படுத்துகின்ற இவ்வாறான கீழ்த்தரமான பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் வெறுப்பு சட்டத்தை( Hate Speech act) இந்த பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும்.

புதிய ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் சிறுபான்மை சமூகம் புதிய அரசாங்கத்துடன் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் இணக்கப்பாட்டு அரசியலுக்கு செல்கின்றார்.

ஆனால் சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுகின்ற விகிதாசார தேர்தல், மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தனியார் சட்டத்தின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை நீக்க வேண்டும் என்று அத்துரலிய ரத்னதேரர் போன்றவர்கள் பிரேரணை சமர்ப்பித்து இருக்கின்ற விடயமானது மிகவும் வேதனைக்குறியது.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூட அவர் எங்கள் அணியினை சேர்ந்தவர். அவர் கூட புலனாய்வுப் பிரிவுக்கு ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டதை வெட்கம் இல்லாமல் அதற்கு எதிராக குரல் எழுப்பியது இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

இவையெல்லாம் சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் வாக்குகளை கூட்டுகின்ற தந்திரோபாய நடவடிக்கையாக நாங்கள் பார்க்கின்றோம். இதனை தயவு செய்து ஆட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் கைவிட வேண்டும்.

சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்ல வேண்டும். இந்நாடு 30 வருட காலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்த நாடு எனவேதான் இவ்வாறான சூழ்நிலையில் இருக்கின்ற எஞ்சிய காலத்தில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

பொருளாதாரத்தில், உச்ச நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இன்று எல்லோர் மத்தியிலும் இருந்து கொண்டு இருக்கின்றது.

இவைகளை விட்டுவிட்டு ஆரோக்கியமான முறையில் இந்த நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தின் ஊடாக சகல சமூகங்களும் இணைந்து அரசியல் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்” என தெரிவித்தார்.