பேருந்து நிலைய குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை

mullaitivu
mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச பேருந்து சாலையில் ஏற்பட்டுள்ள நிருவாக உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் ச.கனகரத்தினம் அவர்களினால் இன்று (23) இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த (26.12.2019) அன்று முல்லைத்தீவு மாவட்ட பேருந்து சாலையில் உள்ள குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் சில கோரிக்கைகளை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

31 பேருந்துக்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்ட பேருந்து சாலையில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. பத்து ஓட்டுனர்களும், பத்து நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும்.

மாவட்ட சாலையில் உள்ள 31 பேருந்துக்களுக்கும் ஒரு திருத்துனர் மட்டுமே இருக்கின்றார். அவரின் கீழ் எட்டு திருத்துனர் தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். அந்த திருத்துனர்களை நிதந்தரமாக நியமிக்க வேண்டும்.

மாவட்ட சாலையில் டீசல் நிரப்பு நிலையம் இருந்தும் நிதிப் பற்றாக்குறையால் அவற்றை பொருத்த முடியாத நிலையில் உள்ளது. நாள்தோறும் ஆயிரம் ரூபா ஊதியத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிதந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்

இவ்வாறு நிவர்த்திக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்த கோரிக்கையினை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு எழுத்துமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச பேருந்து சாலையின் பற்றாக்குறைகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.