மின்பிறப்பாக்கிகளை 6 வருடங்களாக பூட்டி வைத்துள்ள பிரதேச சபை

DJI 20200124 103106 874
DJI 20200124 103106 874

முல்லைத்தீவு பொதுசந்தையின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ள பின்பிறப்பாக்கி இயந்திர தொகுதி கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக பாவனைக்கு வழங்கபடாது பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொதுசந்தை வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆளுகையின் கீழ் உள்ள சந்தையின் இந்த நிலைமை குறித்து தெரிவித்துள்ள சந்தை வியாபாரிகள்,

கடந்த 2013ம் ஆண்டு US AID நிறுவனத்தால் 5கோடியே நாற்பது இலட்சம் ரூபா செலவில் அமெரிக்க மக்களின் அன்பளிப்பாக பொதுச்சந்தை அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பராமரிப்பில் கையளிக்கப்பட்டது .

அன்றிலிருந்து சட்ட விதிகளுக்கு அமைவாக வாடகையை பெற்றுக்கொள்ளும் பிரதேச சபை குறித்த பொதுச்சந்தையை முறையாக பராமரிப்பதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர் .

மேலும் குறித்த சந்தையோடு இணைந்து பல இலட்சம் ரூபா செலவில் இரண்டு பெறுமதியான புதிய மின்பிறப்பாக்கிகள் அடங்கிய தொகுதி அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை வழங்கப்பட்ட நாளிலிருந்து அந்த பின்பிறப்பாக்கிகள் தொகுதி அடங்கிய அறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்சாரம் தடைப்படுகின்ற நாட்களில் சந்தை வியாபாரிகள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த இயந்திர தொகுதியும் பராமரிப்பின்றி பழுதடைந்து செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

போதிய வருமானம் இல்லாது அபிவிருத்திகளை செய்ய முடியாது என கூறும் கரைதுறைப்பற்று பிரதேசசபை பல கோடி ரூபா பெறுமதியில் நன்கொடையாக வழங்கிய குறித்த மக்களின் சொத்தை ஒழுங்காக பராமரிப்பதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இது குறித்து கருத்து தெரிவித்த கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கனகையா தவராசா,

குறித்த மின்பிறப்பாக்கி கலாசார மண்டபத்தின் பாவனைக்காகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தைக்கு மின்சாரம் இல்லாது போனால் இந்த மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த முடியாது அதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் தெரிவித்தார் .

இருந்த போதிலும் குறித்த மின்பிறப்பாக்கிகள் கலாசார மண்டப பாவனைக்கு கூட இதுவரையில் திறந்து பாவிக்கப்படவில்லை. அத்தோடு பொதுச் சந்தையின் மின்சார கட்டமைப்பிலேயே இணைக்கப்பட்டு சந்தை வளாகத்திலே சந்தையின் பாவனைக்காக பயன்படுத்தக்கூடிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.