தேசிய பாடசாலைகள் கிழக்கிற்கு தேவைதானா – மோகன்

mohan 1
mohan 1

மாகாண முறையின் கீழ் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திடம் முன்வைத்த வேண்டுகோளிற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 8 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் நேற்று (29) தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

அதிகார பரவலாக்கம் தேவை, மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என்று வாய் கிழிய பேசிவிட்டு எதற்காக மாகாண முறையின் கீழ் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் எனும் போர்வைக்குள் மத்திய அரசாங்கத்துக்குள் கொண்டு சேர்க்கின்றார்கள்.

இவ்வாறு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைக்குள் உள்வாங்குவதன் மூலம் பாடசாலைகளின் தனித்துவம் இழக்கப்படும், ஆசிரியர் நியமனங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும், சகல அதிகாரங்களும் பரவலாக்கப்படும், மாணவர்கள் உள்வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.