கொரோனா தொற்று எதிரொலி -கப்பல்களில் வருவோர் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை

images 4
images 4

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக்கு வரும் கப்பல்களில் உள்ள பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்த செயற்பாடுகளுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதற்காக சிறிது காலம் தேவை என்றும் குறித்த பகுதியை இனங்காண குறிப்பிடத்தக்க சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அனில் ஜாசிங்க அநேகமான வெளிநாட்டவர்கள் ஒரே நேரத்தில் வருகை தந்தால் அவர்கள் அனைவரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக தூதரகங்கள் மற்றும் நாடுகளுக்கு அறிவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

அதனூடாக எதிர்வரும் நாட்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 25 -29 ஆம் திகதிகளில் தென் கொரியாவில் இருந்து 419 பேரும் இத்தாலியில் இருந்து 726 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை குறைவடையக்கூடும் என தெரிவித்தார்.

இந்த பணிகள் எளிதானவை அல்ல என தெரிவித்த வைத்தியர் இலங்கைக்கு கொரோனா நிலைமை ஒன்று ஏற்பட்டால் அது தேசிய அனர்த்த நிலையாக மாறும் என கூறியுளள்ளார்.

இதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியிலும் இந்த பணியை முன்னெடுப்பதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.