இராணுவத்தினர் சோதனை என்கின்ற வகையில் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர்-செல்வம் அடைக்கலநாதன்

selvam
selvam

தமிழ் பிரதேசங்களில் யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ் நிலை தற்போது படிப்படியாக ஏற்பட்டு வரும் சூழ்நிலை காணப்படுவதாக டெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
தற்போது தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தின் சோதனைச்சாவடிகள் அதிகம் காணப்படுகின்றது.


மக்களை ஏற்றி இறக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வயோதிபர்கள், பெண்கள்,கர்ப்பிணித்தாய்மார் என்று பார்க்காது வெயிலில் இறக்கி நடந்து செல்ல வைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சோதனை என்கின்ற வகையில் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

வடக்கு-கிழக்கில் மாத்திரமே இந்த சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அதற்கான கண்டனத்தை நாங்கள் தெரிவித்துள்ளோம்.


தற்போது கிராமம் கிராமமாக சுற்றி வளைப்பு சோதனைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.போர்க் காலங்களில் எங்களுடைய மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இடை மறிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்ற நிகழ்ந்த காலங்கள் உள்ளது.குறித்த நடவடிக்கைகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக மூன்றாம் பிட்டி,தேவன் பிட்டி கிராமங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


குறித்த சம்பவங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவிப்பதோடு,சிங்கள மக்கள் வாக்களித்தார்கள் என்ற ரீதியில் 3 இல் 2 பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ளுவது ஏற்புடையதாக இருக்காது.


சிங்கள மக்களை பொறுத்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்குகளை ஒன்றாக போட்டார்கள். 
இம் முறை பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் நிச்சையமாக தற்போது உள்ளவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.


இனவாதத்தை தூண்டுகின்ற வகையிலே வடக்கு கிழக்கில் எங்களுடைய மக்களை துன்படுத்துவதினூடாக சிங்கள மக்களினுடைய வாக்குகளை கூடுதலாக பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற திட்டம் இருக்கின்றது.


இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் செயல் படுவதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.குறித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைக்கின்றோம்.


தமிழ் மக்களின் துன்பத்தை மீண்டும் மீண்டும் அதிகரித்து இந்த அரசின் மீதும்,ஜனாதிபதி மீதும் காணாமல் போனவர்களின் குற்றச்சாட்டு மேன் மேலும் அதிகரிக்கின்றது.குறித்த செயல்பாட்டை மீண்டும் நியாயப்படுத்துகின்ற எமது மக்களை அடிமையாக வைக்கின்ற சூழல் மாற்றப்படுவதற்கான வாய்ப்பை மக்கள் கூறுவார்கள்.


குறித்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பி வைத்துள்ளேன்.போரால் பாதிக்கப்பட்ட  எமது மக்களின் துன்பத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டாம்.காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி இன்று வரை உறவுகள் போராடி வருகின்றனர்.


இன்றைய சூழல் போர்க்கால சூழல் போன்று மாறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே ஜனாதிபதியும், பிரதமரும் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.