தேர்தல் கடமை பொறுப்பு வழங்கலில் பக்கச்சார்பா?

7 y
7 y

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பணியாற்றிய அதிகாரி இம்முறை தேர்தல் நலன்புரிச் சேவைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பில் இறுக்கமான நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அவர் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நியமிக்கப்படாமல், நலன்புரிச் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடமைகள் பகிர்ந்தளித்தல் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பதவி நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கடமைகளே இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் வழங்கப்பட்டது.

இதில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முறைப்பாட்டுப் பிரிவில் கடமையாற்றிய உதவித் திட்டமிடல் பணிப்பாளரான கிருஷ்ணா என்பவருக்கு நலன்புரிச் சேவைப் பிரிவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தலுக்கு முதல் நாள் சுன்னாகத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் தேர்தல் முறைகேடு இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றது.

அந்த எரிபொருள் விற்பனை நிலையம் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது.

இந்த முறைகேடு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, மேற்படி அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கிய பொலிஸாரையும் கண்டித்து நடவடிக்கை எடுக்கப் பணித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மேற்படி அதிகாரி முறைப்பாட்டுப் பிரிவுக்கு நியமிக்கப்படாமல், நலன்புரிச் சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.