2ஆவது விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருந்தால் சஜித்தே ஜனாதிபதி!

1 wq
1 wq

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தால், நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவே தெரிவு செய்யப்பட்டிருப்பார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச நான்கு இலட்சம் வாக்குகளைக் குறைவாகக்  பெற்றிருந்தால், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண நேரிட்டிருக்கும். மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைத்த இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால், சஜித் பிரேமதாஸ  ஜனாதிபதியாகத் தெரிவாகி இருப்பார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க பல்வேறு நபர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டும் எனக் கூறிய போது, நாட்டைக் காப்பாற்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

பதவி, பட்டங்கள் எதுவும் கிடைக்காவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ச முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்துக்குத் தடையேற்படும் விதமான எந்த நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.