நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் – சார்க் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டா உறுதி

download 2 2
download 2 2

இலங்கையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சார்க் நாடுகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை சார்க் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் நேரலைக் காணொளி தொழில்நுட்ப வசதி மூலம் ஆலோசனை நடத்தலாம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய நேற்று மாலை 5 மணியளவில் நேரலைக் காணொளி ஊடாக சார்க் நாடுகளின் தலைவர்கள் உரையாடினர். இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தத் தீர்மானித்தோம்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சமூக ஒன்றுகூடல்களைத் தற்காலிகமாகத் தவிர்த்துள்ளோம்.

கொரோனா தொற்றால் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்மணி குணமடைந்து நாடு திரும்பினார். பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

கொழும்பில் விசேட வைத்தியசாலை ஒன்றின் ஊடாக நாங்கள் இந்த நோயாளர்களைப் பராமரிக்கின்றோம். விசேட கவனம் செலுத்துகிறோம். நோயாளர்கள் சுகாதார அதிகாரிகளால் கவனிக்கப்படுகின்றனர்.

விசேட செயலணி ஒன்றின் மூலம் இதற்கான நடவடிக்கையை எடுத்து 24 மணிநேர அலுவலகம் ஒன்றை இயக்கி வருகின்றோம்.

மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலுமான வரை முயற்சிக்கின்றது.

ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்தல்களை வழங்குகின்றோம். 12 வைத்தியசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலில் சீனாவில் இருந்து பாதுகாப்பாக நாம் 34 மாணவர்களைக் கொண்டு வந்தோம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களின் பின்னர் அனுப்பப்பட்டனர். அவர்களில் எவருக்கும் பாதிப்பில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் அதிகம் திரளும் என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம். பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்.

சமயத் தலைவர்கள் தலையீட்டால் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

விஸா வழங்கலை இடைநிறுத்திப் பயண அறிவுறுத்தல்களை நாம் வழங்கியுள்ளோம்.

பொதுப்போக்குவரத்தும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை பாதிப்படைந்து, ஏற்றுமதியில் தாக்கங்கள் ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சார்க் அமைச்சர்கள் மட்ட செயலணி அமைக்கப்பட்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தத்தமது நாட்டின் செயற்பாடுகள் குறித்து இதன்போது விளக்கினர்.