அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது; அமைச்சரவை அங்கீகாரம்

salary increase 1
salary increase 1

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்கான விஷேட கொடுப்பனவை வழங்குதல் தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தற்போதைய ஆகக் குறைந்த தேசிய சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு இல 3 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்.

2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்திற்கு அமைவாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 10,000 (40*25) தேசிய ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் மற்றும் ரூபா 400 (50*8) தேசிய ஆகக் குறைந்த நாளாந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவை கவனத்தில் கொண்டு அதில் தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளமாக தற்பொழுது உள்ள ரூபா 10,000 தொடக்கம் ரூபா 12,500 வரையிலும் ரூபா 2,500 இனாலும் தேசிய ஆகக் குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 400 தொடக்கம் ரூபா 500 வரையிலும் 100 ரூபாவினாலும் அதிகரிக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சட்டத்தில் 3ஆவது சரத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக 2016ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பள சட்டத்தின் 3ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சட்டத்திருத்த வரைவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குதல்

அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்காக தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசை கவனத்தில் கொண்டு அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பங்களிப்புடனும் கண்டி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் அங்கத்துவத்துடனான அமைச்சவையின் உப குழுவொன்று 2019 மார்ச் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் துணைச் சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சிபாரிசு அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அரசாங்க துறை சம்பள மதிப்பீடு தொடர்பாக விசேட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் சிபாரிசு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் 50 சதவீதம் அதிகரித்தல்.

2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1ஆம் திகதி தொடக்கமும் எஞ்சிய 50 வீத அதிகரிப்பு 2021 ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தவதற்கும் அமைச்சரவையினால் 2019 செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குவதை நோக்ககாக் கொண்டு சம்பள மதிப்புரை தொடர்பாக விசேட ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் 50 சதவீதத்தை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2020 ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் வழங்குவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது