மலேரியா நோய்க்கான மருந்து கொரோனா தொற்றைத் தடுக்காது

1d1
1d1

‘COVID 19’ என்கிற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மலேரியா நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற Chloroquine என்ற மருந்தை வைத்தியசாலைகளில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மருந்தை COVID 19 தொற்று பரவாமல் இருப்பதற்காகப் பயன்படுத்துவதால் எவ்விதப் பயனுமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகவே, இந்த மருந்தைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வைத்தியசாலைகளில் மாத்திரம் மருத்துவ ஆலோசனைக்கு அமைய தேவையான சந்தர்ப்பங்களில் இந்த மருந்தை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தட்டுப்பாடின்றி இந்த மருந்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை புதிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு மலேரியா நோயாளர்களுக்கான மருந்தைப் பரிந்துரைத்ததால் அது தொடர்பாக தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

இதற்கமைய, இந்த மருந்தை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமித்த விசேட வைத்திய நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.

நிபுணத்துவ மருத்துவ அதிகாரியின் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் இந்த மருந்து விநியோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.