கொரோனா;உடனடி நடவடிக்கை எடுங்கள்- அவசர கோரிக்கை!

90 2
90 2

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் ஆளுநருக்கு இன்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டிற்குரியது. இலங்கையில் நோய் வந்தபின்னர் காப்பதைவிட வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது.

ஏனெனில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தினால் மூச்சுத்திணறல் நிலை ஏற்படுமானால் எமக்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளின் எண்ணிக்கை அங்கு கடமையாற்றும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய வசதிகளைப் பார்த்தால் நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு நிச்சயமாக விடைதேட முடியாது என்பதே உண்மை.

எனவே மக்கள் நலன்சார்ந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது இன்றியமையாதது ஆகும்.

ஊரடங்கின் அர்த்தம் புரிந்தும் புரியாதவர்களாக, ஊரங்கை மீறுவது கெட்டிக்காரத்தனம் என நினைப்பவர்களும், ஊரடங்கு வேளைகளில் வெவ்வேறு அத்தியவசியமற்ற காரணங்களைக் கூறிக்கொண்டு வீட்டைவிட்டு வெளிவருபவர்களும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொருட்களை வாங்கும் நோக்கில் முண்டியடித்துக்கொண்டு சுகாதார விதிகளை மீறி ஒன்றுசேரும் செயற்பாடுகளை நோக்கும்போது எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

எனவே வடக்கு ஆளுநர், சில நடைமுறைகளை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

1. வடக்கு மாகாணம் முழுவதும் சனத்தொகை மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்து வலயங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.

2.ஒவ்வொரு வலயங்களிலும் காணப்படும் தனியார் மற்றும் அரச விற்பனை நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அத்தியவசியப் பொருட்களின் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

3.ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் பொலிஸாரின் உதவியுடன் சம்பந்தப்ட்ட வலயங்களில் வாழும் மக்கள் அந்தந்த வலயங்களிலேயே பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

4.அவசர மருத்துவ நிலைகளிலும் ஏனைய அவசர சந்ததர்ப்பங்களிலும் மட்டும் குறிப்பிட்ட வலயங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான மக்கள் நலன்சார் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதால் நோய் பரம்பலைக் குறிப்பிட்ட வலயத்தினுள் கட்டுப்படுத்துவதுடன் தடுப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த முடியும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தி நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தலாம். ஆளுநர் மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்து கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.