நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுமாறு அறிவிப்பு!

58f45cca 8bb4e30f election commission 850x460 acf cropped
58f45cca 8bb4e30f election commission 850x460 acf cropped

இலங்கையில் தற்போதுள்ள நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தினம் தொடர்பான விடயத்தில் அரசியலமைப்பு ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கூறியுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு இம் மாதம் முதலாம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா தொற்று பரவல் பற்றி ஆராய்ந்த போதும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட நிபுணர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவும் ஏப்ரல் மாதத்திற்குள் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை மே மாத இறுதிப்பகுதியில் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்பதோடு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து மூன்று மாத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்று இம் மாதம் முதலாம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் சிக்கலுக்கு தீர்வினைக் காணும் முகமாக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொள்கிறது.

இது தொடர்பில் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

இதே வேளை இவ்விடயம் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெளிவுபடுத்துகையில்,

கொரோனா பரவலின் காரணமாக இம் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான தினம் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

எனினும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

அதற்கமைய மீண்டும் புதிய நாடாளுமன்றம் கூடும் தினம் பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும். அந்த தினமானது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னரான ஒரு தினமாக இருக்க வேண்டும்.

அதற்கமைய இவ்வருடம் ஜூன் முதலாம் திகதியளவில் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். அவ்வாறு ஜூன் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமாயின் மே மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறெனில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இம் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் இம் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை.

ஆனால் ஜூன் மாதம் முதலாம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையில் சிக்கல் ஏற்படும். எனவே தான் இந்த சிக்கலைத் தீர்த்துக் கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது என்றார்.