யாழ் மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் நேற்று சோதனை!

WhatsApp Image 2020 04 06 at 3.54.08 PM 1 1
WhatsApp Image 2020 04 06 at 3.54.08 PM 1 1

யாழ் மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் வேண்டுகோளை அடுத்து யாழ் மாவட்ட செயலாளரின் உத்தரவின்படி நேற்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை உத்தியோத்தர்களினால் நேற்று (06) யாழ் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பாவனையாளர் முறைப்பாடுகளின் அடிப்படையில் பல விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக நிலையங்களில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் மொத்த இருப்பும்  கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் நேற்று யாழ்ப்பாணம், கொழும்புத்துறை திருநெல்வேலி , கொடிகாமம் சாவகச்சேரி, கைதடி ஆகிய இடங்களில் உள்ள விற்பனைநிலையங்கள்  பரிசோதிக்கப்பட்டதுடன் இருப்பு கணக்கும் எடுக்கப்பட்டது .

அவ் வியாபார நிலையங்களில் உள்ளூர் அரிசி வர்க்கங்களான ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பன்  150/- ரூபாயை அண்மித்த நிலையில் விற்கப்படுகின்றது . இவற்றிற்கு கட்டுப்பாட்டு விலை இல்லாமையால் இதனுடைய விலையினை கட்டுப்படுத்துவதற்கு ஒரு பொறிமுறையினை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

கோதுமை மா, பெரிய வெங்காயம் என்பன கட்டுப்பாட்டு விலையில் பெறக்கூடியதாக உள்ளது . சீனியின் இன்றைய விலை ரூபா 117/- ஆக காணப்பட்டது . அதனுடன் வர்த்தக நிலையங்களில் சீனி போதிய அளவு இருப்பு காணப்படுகின்றது.

தற்போது மஞ்சள் பருப்பு ( ரூபா165 – 180 ) , செத்தல் மிளகாய் ( ரூபா 650 ) , பயறு ( ரூபா300 ) கீரி சம்பா ( ரூபா135 – 150 ) , கடலை ( ரூபா260 ) போன்ற பொருட்கள் கட்டுப்பாட்டு விலை காணப்படாததனால் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.

சிவப்பு பருப்பு , ரின் மீன் ஆகியன யாழ் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் மானிய விலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெறக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.

நேற்று பரிசோதிக்கப்பட்ட 10 மொத்த வியாபார நிலையங்களில் காணப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விபரம் பின்வருமாறு:

  • ஆட்டக்காரி அரிசி 10 MT  
  • கோதுமை மா 157 . 5 MT  
  • மஞ்சள் பருப்பு 19 MT  
  • கீரி சம்பா 59 MT

இவ்வாறாக நேற்றைய சோதனை நடவடிக்கையில் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி நடவடிக்கை தொடர்பான தேவைப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளது.