கோத்தபாய விவகாரம் பொதுஜன முன்னணிக்கு அதிர்ச்சி!

pothuyanaperamuna
pothuyanaperamuna

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளமை மட்டுமல்லாமல், அதில் கோரப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு குறித்துப் பரிசீலித்து வெள்ளிக்கிழமையன்று அது பற்றிய முடிவை வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தப்பித் தவறி இடைக்கால உத்தரவு அக்கட்சிக்குப் பாதகமாக வரும் எனின், அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்குக் கூட கால அவகாசம் இருக்காது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இடைக்காலத் தடைக் கோரிக்கை தொடர்பாகத் தனது உத்தரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (4 ஆம் திகதியன்று) வழங்குவதாக மேன்முறையீட்டுநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5,6 ஆம் திகதிகள் சனி,ஞாயிறு விடுமுறை நாள்கள். திங்கட்கிழமையன்று வேட்புமனு ஏற்கும் நாள்.

கோத்தபாயவின் இலங்கைக் குடியுரிமையை இடைநிறுத்தக் கோரும் வேண்டுகோளை ஏற்று அதற்கான இடைக்கால உத்தரவை வெள்ளியன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிவிட்டால், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்து நிவாரணம் பெற அவருக்குக் கால அவகாசம் இருக்காது, அவரால் இத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமல் போய் விடும் எனச் சுட்டிக்காட்டப் படுகின்றது.

இந்த நெருக்கடிச் சூழலிலேயே பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் நேற்று மாலையும், நேற்றிரவும் கூடி நிலைமையின் விபரீதத்தை ஆராய்ந்தனர் என்றும், நீதிமன்றத் தீர்ப்புப் பாதகமானால் அதை எதிர் கொள்ளும் வகையில் மாற்று வேட்பாளர் குறித்து அவர்கள் ஆராய்ந்தனர் என்றும் அறிய வந்தது.