20 ஆம் திகதி முதல் தொலைகாட்சி சேவைகளின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

30 22112019 SSK CMY
30 22112019 SSK CMY

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையால் தொலைகாட்சியூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இம்மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் இரு தொலைகாட்சி சேவைகளின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் மாணவர்களுக்கும் அவர்களது கல்வி சார் விடயங்களுக்கும் முக்கியத்துவமளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளமைக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவ்விதத்திலும் கல்வித்துறை பாதிப்படையாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகிறது. வீடுகளிலிருந்தே மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இயங்கும் ஐ தொலைகாட்சி சேவை மற்றும் நேத்ரா தொலைகாட்சி சேவை என்பவற்றினூடாக இம் மாதம் 20 ஆம் திகதி முதல் கல்விக்கான முழு நேரத்தையும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளில் வகுப்பரை கல்விக்கு அப்பால் தொழிநுட்ப கல்வி, சுய கல்வி , தொலைதொடர்பாடல் கல்வி உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கற்பிக்கப்படுகின்றன. எனினும் எமது நாட்டிலுள்ள மாணவர்கள் இது வரையில் சுய கற்றல் முறைமையைக் கூட பின்பற்றுவது கூட மிகக் குறைவாகும்.

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் காரணமாக உயர் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக 3 மாத காலம் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே இந்த உயர் தொழிநுட்ப கற்பித்தலில் உயர்தர மாணவர்களுக்கும் ஐந்தாம் தர புலமைபரிசில் மாணவர்களுக்கும் விசேட முறைமைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.