நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து!

download 1 12
download 1 12

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று  நடைபெற்ற சமூக வலைத்தளக் கலந்துரையாடலில் இது தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றுக் கருத்துத் தெரிவித்தனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும்போது, இத்தகைய நெருக்கடி சூழலில் அதனை மீளக் கூட்டுவது தொடர்பில் அரசமைப்பில் உரிய ஏற்பாடுகள் உள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக இருந்தால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கட்டளைகளுக்கு அனுமதியைப் பெறும் வகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலப் பகுதியில் நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்கள் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என்பதால், மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு பேச்சு நடத்தப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

“விஜயதாஸ ராஜபக்ச கூறும் விடயங்களுக்கு அமைய, 105/4 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால், அதனை அங்கீகரிப்பதற்காக 10 நாட்களுக்குள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். அத்தோடு, அரசமைப்பின் 70 ஆவது சரத்தின் 7 ஆவது உப பிரிவில் இத்தகைய விசேட சந்தர்ப்பங்களில் செயற்பட வேண்டிய விதம் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

“பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர நிலை தற்போது எழவில்லை. ஆகையால், தேவையெனில் சட்ட ரீதியான அறிவித்தல் மூலம் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்” எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.