கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட புத்தாண்டில் பிரார்த்தியுங்கள் -சைவ ஆதீனங்கள் வேண்டுகோள்

kuru 1
kuru 1

மலரும் புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே, குடும்ப உறவுகளுடன் இறை பிரார்த்தனை செய்து இல்லாதவர்களுக்கு உதவும் கைங்கரியத்துடன் கடைப்பிடியுங்கள் என சைவ ஆதீனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக  பரமாச்சரிய சுவாமிகள், தென் கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார், மெய்கண்டார் ஆதீன முதல்வர் உமாபதி சிவம் அடிகளார் ஆகியோர் விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று உலகின் மிகவும் நெருக்கடியான துன்பகரமான நோயின் தாக்கத்தின் விளைவுகளுடன் புதிய தமிழ் – சிங்கள புத்தாண்டு மலர்கின்றது.

இந்த முக்கியமான தருணத்தில் எம்மிடையே உள்ள சகல வேற்றுமைகளையும் மறந்து சகோதரத்துவத்துடன் இக்கொடிய கொரோனா நோயிலிலிருந்து விடுபட எம்மால் இயன்ற சகல சுகாதார வழிமுறைகளையும் மானசீகமாக கடைப்பிடிக்க உறுதி எடுப்போம்.

எம் அயலில் யாராவது பசித்திருந்தால் அவர்களுக்கு இயன்றவரை உதவுவோம். சமூகத்தின் நலிவுற்ற பிரிவினராகிய முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகளின் நலனில் அதிக கவனம் எடுப்போம்.

உள்ளம் பெரும் கோயில் எனும் தத்துவத்தை உணர்ந்து ஆலய புற வழிபாடுகளை இக்கொடிய தொற்றுக் காலத்தில் தவிர்த்து உள்ளன்போடு எம் இல்லங்களிலிருந்து தாய் தந்தையினரின் ஆசிர்வாதத்தோடு எமது வழிபாடுகளை எளிமையான சமய சம்பிரதாயங்களுடன் கடைப் பிடிப்போம்.

மருத்து நீர் போன்றவற்றை எமக்கு வீட்டில் கிடைக்கும் மூலிகை இலைகள் கொண்டே தயாரிப்போம். இந்த காலத்தில் புத்தாடை புனைதல் உட்பட அனைத்து ஆடம்பரங்களையும் தவிர்ப்போம்.

பல ஆலயங்களும் அமைப்புக்களும் தன்னார்வலர்களும் ஆற்றி வரும் நிவாரணப் பணிகள் மனத்திற்கு நிறைவை தருகின்றன. அவை மலரும் புத்தாண்டிலும் இன்னும் வீச்சுடன் இக்கொடிய நோய் விளைவுகள் முடியும் வரை தொடரப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைத்து சைவசமயிகளும் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றோம்.

அன்பே உருவான சிவப் பரம்பொருள் இக்கொடிய துயரத்திலிருந்து எம்மை விடுவித்து எம் எல்லோர் மனங்களிலும் அன்பும் அறமும் ஓங்க செய்ய வேண்டும் என இம் மலரும் புத்தாண்டில் இலங்கையின் சைவ ஆதீனங்களின் குருமுதல்வர்களாகிய நாம் கூட்டாக உருக்கமான பிரார்த்தனையுடன் வேண்டுகின்றோம். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.