அரச அதிகாரிகளின் கடமையில் தலையிடும் இராணுவம், முல்லைத்தீவு கிராம அலுவலர்கள் விசனம்

IMG 1559
IMG 1559

கொவிட் 19 அவசர நிலை காரணமாக பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கு நிலையால் பாதிக்க பட்டிருக்கும் மக்களுக்கு இரவு பகல் பாராது சேவைகள் ஆற்றிவரும் கிராம அலுவலர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கடமைகளில் இராணுவமும் ,இராணுவ புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் தலையிட்டு கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கிராம அலுவலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .


ஊரடங்கு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மக்களுக்கான நிவாரண பணிகளை ஒழுங்கமைப்பது , அரசின் சமுர்த்தி நிதிகளை வழங்குவது நிவாரண நன்கொடையாளர்களின் நிவாரணம் வழங்கும் வேலைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை இரவு பகல் பாராது கிராம சேவையாளர்கள் பெரும் பணி சுமைகளுக்கு மத்தியில் முன்னெடுத்து செல்லும் நிலையில் இராணுவமும் ,இராணுவ புலனாய்வாளர்களும் ஒவ்வொரு கிராம சேவையாளர்களையும் தொடர்ப்பு கொண்டு அவர்களால் முன்னெடுக்க படும் பணிகள் குறித்து நாளாந்தம் தகவல்களை திரட்டி வருவதாகவும் வஸ்பங்கப்பட்டு வரும் நன்கொடை நிவாரண பணிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு தொடர்ந்தும் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு நாளும் கடமை நேரங்களில் தொந்தரவு செய்து வருவதாகவும் கிராம சேவையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .


குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் அநேகமான கிராம சேவையாளர்களுக்கு இவ்வாறு இராணுவ புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு தொந்தரவு செய்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத கிராம சேவையாளர்கள் எமக்கு தெரிவித்தனர் .
மக்களுக்கு சேவை வழங்கும் நிர்வாக ரீதியான செயற்பாட்டில் இராணுவம் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு இந்த கொரோனா சூழலை சாதகமாக பயன்படுத்தி அரசு இராணுவம் மூலம் நிர்வாக செயற்பாடுகளிலும் இராணுவ தலையீட்டை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது இராணுவ மயமாக்கலை மேலும் விரிவுபடுத்தும் செயற்பாடு எனவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர் .