8 பேருக்கும் கொரோனா தொற்றியது எப்படி?

 முகாம்கள்
முகாம்கள்

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சுவிஸ் மத போதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 20 பேர் பலாலிப் பகுதியில் கடந்த 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அன்றிலிருந்து இரண்டு வாரங்கள் அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கவேண்டும் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது. சுமார் 11 நாட்களின் பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் 8 பேர் தொற்றுள்ளானவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தத் தொற்றானது எவ்வாறு வந்தது என்று தெளிவாகக் கூற முடியாது. சில வேளைகளில், ஏற்கனவே தொற்று அடையாளம் காணப்பட்ட 6 பேரும் இவர்களுடன் இருந்ததன் காரணமாக அவர்களிடமிருந்தும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற பகுதிகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் தொடர்ச்சியாக அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையேனும், தொடர்ச்சியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முற்றாகத் தொற்று இல்லை என்பதன் பின்னரே அவர்கள் வெளியில் விடப்படுவார்கள். ஆகவே, பொதுமக்கள் இதுபற்றி அச்சமடையத் தேவையில்லை.

சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் பங்கேற்ற ஏனையவர்களும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களிடையேயும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. நெருங்கிய தொடர்பை பேணியவர்களை முதலில் தனிமைப்படுத்தியதனால் அவர்களுக்கே கூடுதலான தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆகவே, ஏனையவர்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அவர்களின் பரிசோதனையிலும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், யாராவது ஒருவருக்கேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சலனங்கள் மக்களிடையே நிலவலாம். அந்த அச்சங்களை எங்களால் முழுமையாகப் போக்கிவிட முடியாது. அது மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வராது என்பதையும் கூறி விட முடியாது.

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை ஊழியர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் எவ்வாறான நிலைமை இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது. அவர் கடந்த 22ஆம் அல்லது 23ஆம் திகதி காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு முன்னர் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” – என்றார்.