வாணி விழா நடாத்த தடை !

rajeswaran
rajeswaran

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகங்களில் இவ்வருடம் வாணி விழாக்களை நடாத்தக் கூடாது என பிரதேச செயலாளர்கள் தடை விதித்துள்ளனர்.

அரச அதிகாரிகள் ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மதத்திற்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. மாறாக அவர்கள் பொறுப்பேற்று நடாத்துகின்ற திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட சகல இடங்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்கள். இந்நிலையில் அரச அதிகாரிகள் தமது பணியை இனம், மதம் பாராது மேற்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து ஒரு இனத்திற்கு மட்டும் அல்லது ஒரு சமயத்திற்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஏனைய இனத்தவர்களையும், ஏனைய மதத்தவர்களையும் புண்படும் வகையில் செயற்பட்டால் அந்த அரச அதிகாரிகள் அப்பதவிக்கு பொருத்தமற்றவர்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகம் என்பவற்றில் பல வருட காலமாக வாணி விழா நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. எனினும் இவ்வருடம் இப்பிரதேச செயலகங்களில் வாணி விழாக்களை நடாத்தக் கூடாது என்று பிரதேச செயலாளர்கள் தடை விதித்துள்ளனர். இவ்விடயம் இப்பிரதேச செயலகங்களில் பணியாற்றும் இந்து ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் போன்றவர்களின் மத உரிமையை பறிக்கும் செயலாகவும் அவர்களின் மனங்களை காயப்படுத்தும் செயலாகவும் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும். இவ்விடயம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை பல இனத்தவர்களையும், பல மதத்தவர்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. இந்நாட்டில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பரம், நட்புறவுடன் வாழ வேண்டும். ஒரு இனத்தவர் செய்கின்ற செயல் ஏனைய இனத்தவர்களின் மனங்களை காயப்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் இந்நாட்டில் அமைதி, சமாதானம் என்பன மலரும்.

தற்சமயம் கல்முனை தெற்கு பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகம் என்பவற்றில் வழமையாக இடம்பெற்று வந்த வாணிவிழா நிகழ்வை இவ்வாண்டு நடாத்துவதற்கு தடை விதித்துள்ள பிரதேச செயலாளர்களின் வன்மப் போக்குக் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சமூக மேம்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷன் ஆகியோர் விரைந்து செயற்பட்டு இத்தகைய தடையினை தகர்த்தெறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இப்பிரதேச செயலகங்களில் கடமையாற்றம் சகல இந்து ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் போன்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் விரும்புகின்ற பொருத்தமான இடங்களுக்கு உடனடியாக இடமாற்றங்களை வழங்கி இன முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.