ஜுன் 20 தேர்தல் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

1 a 1
1 a 1

கொரோனாவின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் கொரோனா வைரஸின்  தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பான விசேட கூட்டம் நேற்றுப் பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைத்திய நிபுணர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ், அதனால் ஏற்பட்டுள்ள சமூக தாக்கம், அது எப்போது கட்டுக்குள் வரும் என்பன உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பின் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.