வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மன்னாருக்கு வர பாஸ் வழங்கப்படாது

1 Meeting
1 Meeting

ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது இரு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், “இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பாஸ் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, தற்போது அனைவரும் பாஸ் நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள வைத்தியர்கள், இதனால் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். வெவ்வேறு தரப்பினரினால் வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறையினால் குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் யார் பாஸ் வழங்கினாலும் இறுதியில் பிரதேச செயலாளர்களின் சிபாரிசு இருக்கின்ற பாஸிற்கு மாத்திரமே வைத்திய சான்றிதழ் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலங்களில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும். தெற்கில் இருந்தும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் வருகின்ற எவருக்கும் எமது மாவட்டத்தில் பாஸ் வழங்கப்படுவது இல்லை என வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட விவசாய உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எமது மாவட்டத்தைப் பொறுத்தவகையில் சிறுபோகத்தில் விதைக்கப்படுகின்ற நெல் மற்றும் சிறு தானியங்களின் பயிர்ச்செய்கை 6 ஆயிரத்து 860 ஏக்கரில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதில் 2 ஆயிரத்து 606 ஏக்கரில் சிறு தானியச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனையவை நெற் செய்கைக்கு பயன்படுத்தப்படும். அந்தவகையில் சிறிய குளம், நடுத்தர குளம், பெரிய குளங்கள் ஆகியவை இணைந்து சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கைக்கும் 2,606 ஏக்கர் சிறு தானிய செய்கைக்கும் பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தற்போது சுமார் 582 ஏக்கருக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றிற்குத் தேவையான உரம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி செயலத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது 887 மெற்றிக் தொன் உரம் தற்போது தேவையாக உள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.