5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் பணிநீக்கம்

0 gg 1
0 gg 1

மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24 ஆம் திகதி முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றிய மேற்படி சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் கொரோனா வைரஸ் சூழலில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கலில் 13 பேருக்கு தலா 4000 ரூபா மட்டுமே வழங்கியிருப்பதாகவும் 5 பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க வில்லை என்றும் காத்திருப்புபட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருவதாக தலா ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே காணிமோசடி தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிரான் பிரதேச செயலாளரால் விசாரணை குழு அமைக்கப்பட்டு அவ்விசாரணையில் குற்றம் இழைக்கப் பட்டதாகக் கருதி சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமான மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்து அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.