திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் – கிளிநொச்சி மாவட்டம்!

download 1
download 1

எதிர்வரும் திங்கள் கிழமை முதல் (11) கிளிநொச்சி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பும் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமை போல் செயற்படும் எனவும், பொது மக்கள் கூடுகின்ற மற்றும் சேவைகளை பெறுகின்ற நோக்கில் வருகின்ற போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், மேலும் கை கழுவும் ஏற்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும், சமூக இடைவெளி பேணப்படல் போன்ற கொரோனா பாதுகாப்பு ஏற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அரச, மற்றும் தனியார் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (07) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் எதிர்வரும் (11) ஆம் திகதி ஊடரங்கு தளர்த்தப்படும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது .

இந்நிலையில் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் சேவை பெறுகின்ற இடங்களில் கைகழுவதற்குரிய வசதியை ஏற்படுத்தல், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல், வைத்தியசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன ட என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் அரச திணைக்களத்தலைவர்களின் தலைவர்கள், தனியார் நிறுவங்களின் தலைவர்கள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என மாவட்டத்திலுள்ள அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டிருந்தர்.