எதிர்வரும் 11 திகதி முதல் இ.போ.சபைக்கு சொந்தமான 1, 500 பேருந்துகள் சேவையில்!

5 dt
5 dt

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் அலுவலக நேரங்களில் பணியிடங்களுக்கு வரும் ஊழியர்களை நலன் கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பேருந்துகள் மாவட்ட எல்லைக்குள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கினால் அதற்கேற்ப பேருந்துகள் பயணங்கள் தொடங்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை மேலும் ஏதேனும் நிறுவனங்கள் கோரினால், ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கிணங்க ஊழியர்களை கொண்டு செல்ல பேருந்துகளை வழங்கவும் இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 426 பேருந்துகள் தற்போது நாடு முழுவதும் மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே பேருந்துகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.