அனைவரும் ஒத்துழைப்பது அவசியம்!

5 rre
5 rre

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை கொரோனா வைரஸ் தாக்கத்தால் முடக்கப்பபட்டிருந்த நிலையில் நாளையதினம் மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறித்து கருத்து கேட்டபோது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

கொரோனா தொற்றானது எமது மக்களை அச்சுறுத்தி வந்திருந்த நிலையில் எமது நாடு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலிலும் சுகாதார தரப்பினர் முன்னெடுத்திருந்த சுகாதார நடைமுறைகள் காரணமாக நாளையதினம் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் இத்தொற்று எம்மை நெருங்காதவகையில் நாம் ஒவ்வொருவரும் அரசினதும் சுகாதாரத் துறையினரதும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்துகொண்டால் கொடிய நோயான கொரோனாவிலிருந்து நம்மையும் நமது உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதுடன் எமது நாட்டிலிருந்து குறித்த நோய்த் தொற்றை முற்றாக இல்லாதொழிக்கவும் முடியும்.

குறிப்பாக நாளையதினம் வியாபார நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான சந்தைகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சுகாதார தரப்பு அறிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதுடன் பொதுமக்களும் அத்தகைய கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவசியமாகும்.

ஆபத்தான கொரோனா தொற்றானது இதுவரை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் அறிவோம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என எண்ணி அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் இனியும் எத்தகைய ஆபத்தை கொரோனா ஏற்படுத்தவல்லது என்பதையும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்தவகையில்’ சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் நாம் அனைவரும் சமூகப் பொறுப்போடு அரசினதும் மருத்துவர்களதும் ஆலோசனைகளுக்கு ஒத்துழைத்து நடப்பது அவசியமாகும்.

மேலும் நாடு முடக்க நிலையிலிருந்து நாளையதினம் திறக்கப்படுகின்றது என்ற எண்ணத்துடன் எவரும் செயற்படாது சமூக இடைவெளியை பேணுவதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது, முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதனூடாக நாம் இந்த கொரோனா அச்சுறுத்தலிலிருந்து முற்றாக விடுபட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.