கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 256 பேர் விடுவிப்பு!

IMG 5876
IMG 5876

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தனிமை படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி மக்கள் இன்றையதினம் விடுவிக்க பட்டனர்.
கொழும்பு நகர்  பகுதியில்  யாசகம் பெறுபவர்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள்  மற்றும் மனநலம்குன்றியவர்கள் உள்ளடங்கிய  258 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக  கடந்த மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின்  அனுமதியுடன் களிக்காட்டு பகுதியில் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டிருந்தது .

இதனை தொடர்ந்து அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் 256 பேர்   இருபத்தொரு நாட்கள் தனிமைப்படுத்தலை  நிறைவு செய்ததன் பின்னணியில் அவர்களுக்கான பி  சி ஆர்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்றையதினம் (10)  208 பேர் வெளியேறியுள்ளனர்.

மீதி 48 பேர் இன்று கந்தக்காடு புணர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்  .

இதனடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்களில்  77 பேர் 3 பேருந்துகளில் கொழும்பு பகுதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இவர்களின்  திறமைகளுக்கு  ஏற்ற வகையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் 

இங்கே வருகைதந்தவர்களில்  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை  முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்ட இருக்கின்றனர் அந்தவகையில் கோணபல பகுதிக்கு 01 பேருந்தில் 34 பேரும் மத்துகம பகுதிக்கு 01 பேருந்தில் 16 பேரும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .

அதேவேளை இதில் வருகை தந்தவர்களில் 30 பேர்   மருத்துவ சிகிச்சைகளுக்காக  ரிதிகம பகுதிக்கு ஒரு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .

அதேவேளையில் இன்னுமொரு பகுதியினர் சுய தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் முகமாக அவர்கள் சுய தொழில் பயிற்சிகளும் வேலைகளுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கின்றனர் இவர்களில் 26 பேர் வல்பிட்டபகுதிக்கு ஒரு பேருந்திலும் மேலும்  25 பேர்  போம்புவில பகுதிக்கு ஒரு பேருந்திலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இதுவரை 8 பேருந்துகளில் 208 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை இவர்களில் போதைக்கு அடிமையாகி இருந்தவர்கள் என்று இனங்காணப்பட்ட 48 பேர் நீதிமன்ற அனுமதியோடு கந்தக்காடு  புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் அவர்களையும் அனுப்பி வைப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.