பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை

2 rre
2 rre

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவிக்குரிய குணாதிசயங்களை உதறித் தள்ளிவிட்டுப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றார் எம்.ஏ.சுமந்திரன். இவர் தனது கருத்துக்களினால் சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி வருகின்றார். இவருக்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

“சிங்கள மொழியில் சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியொன்றில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை – ஆயுதப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாகச் சித்தரித்து அதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் – தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மத்தியில் பல உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டம் விளையாட்டுப் போராட்டம் அல்ல. இது சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான போராட்டம். தமிழர்கள் மீதான திட்டமிட்ட கல்வித் தரப்படுத்தல், மொழிப் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம். தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டம். இதைச் சுமந்திரன் அறியாமல் இருக்கமாட்டார்.

ஆரம்பத்தில் தமிழர்கள் உரிமைகளைக் கேட்டு அஹிம்சை வழியில்தான் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை சிங்களப் பேரினவாதிகள் அடக்க முற்பட்டபோதுதான் எமது தமிழ் இளைஞர்கள் தமது கைகளில் ஆயுதங்களை ஏந்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். ஆயுதப் போராட்டம் சிங்களப் பேரினவாதிகளினால் தமிழர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டதாகும். இதையும் சுமந்திரன் அறியாமல் இருக்கமாட்டார்.

கடந்த காலங்களிலும் பல தருணங்களில் தமிழர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சுமந்திரன் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். கட்சிக் கூட்டங்களில் இதனைப் பல தடவைகள் தலைமையிடம் எடுத்துரைந்திருந்தோம். எனினும், இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” – என தெரிவித்துள்ளார் .