சுமந்திரனைக் காப்பாற்ற விக்கியை துணைக்கழைத்த வேழன்!

velamalithan
velamalithan

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதங்கள் இன்றி சுமந்திரனின் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர் ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் தியாகங்களையும் தங்கள் வாக்கு அறுவடைக்காக முற்று முழுதாகப் பயன்படுத்திவரும் தமிழரசுக் கட்சியின் சிறீதரன் தலைமையிலான கிளிநொச்சி மாவட்டக் கிளை கருத்தெதுவும் சொல்லாமல் அமைதிகாத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் பல முறை கருத்துக்கேட்க முற்பட்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை. சிறீதரனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிதன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடர்பாக கட்சியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், தங்களுடைய கருத்தைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றார்.

கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருத்துச் சொல்லும்போது தாங்கள் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, சுமந்திரன் மட்டுமல்ல விக்னேஸ்வரன் போன்றவர்களும் இப்படித்தான் கடந்த காலத்தில் புலிகளுக்கு எதிராக கதைத்தார்கள் என்றார்.

நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இன்னும் சொல்லப் போனால் சிறீதரன் போன்றவர்களால் வேண்டி அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட விக்னேஸ்வரனும் கடந்த காலத்தில் அப்படியாக ஒரு சில சந்தர்ப்பங்களில் கதைத்திருந்தார் என்பதும் அந்த நேரங்களில் எல்லாம் வேழமாலிதன், சிறீதரன் போன்றவர்கள் இன்று அமைதியாக இருந்ததுபோலவே அன்றும் அமைதியாக இருந்தார்கள். அன்றைய விக்னேஸ்வரனின் கருத்துக்கு எந்தவித எதிர்வினையும் வேழன் போன்றோரிடமிருந்து வரவில்லை. வடக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து விக்னேஸ்வரன் அரசியல் செய்ய முற்பட்டபோது அவரை அகற்றுவதற்காக சுமந்திரனுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்பதும் வரலாறாகப் பதிவில் உள்ளது.

தமிழ்க் குரல் ஊடகத்தைப் பொறுத்தவரையில் ஆள் பார்த்து நாம் விமர்சிப்பதில்லை. தமிழ்த் தேசியத்தின் முகமூடி அணிந்துகொண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் அனைவரையும் விமர்சிப்போம்.

வேழமாலிதன் அவர்களே,

அன்று விக்னேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பாக எதிர் நிலைப்பாட்டில் இருந்தபோது நாம் விமர்சித்தோம் நீங்கள் மௌனம் காத்தீர்கள். இன்று சுமந்திரன் அதைச் செய்யும்போது நாங்கள் எதிர்க்கிறோம். நீங்கள் மௌனம் காக்கிறீர்கள். இன்று சுமந்திரனைப்பற்றிக் கதைக்காமல் அன்று விக்னேஸ்வரன் செய்த தவறை தற்போது சுட்டிக்காட்ட முற்படுகிறீர்கள். அன்று மௌனமாக இருந்த காரணம் விக்னேஸ்வரன் உங்கள் கட்சி என்பதால்தானே?. உங்களைப் பொறுத்தவரையில் உங்கள் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டால் நீங்கள் மௌனமாக இருப்பீர்கள் அப்படித்தானே?