5 பேருக்கும் கண்டறியப்பட்டது இறந்த கொரோனா வைரஸே! – மருத்துவ நிபுணர் ரஜந்தி விளக்கம்

0 5g
0 5g

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மேற்கொண்ட சோதனைகளில் 5 பேருக்கு குறைந்த அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களது உடலில் கொரோனா வைரஸ் இறந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். அதுவே பி.சி.ஆர். சோதனையில் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இறந்த வைரஸ் ஒருவரிடமிருந்த இன்னொருவருக்குப் பரவாது என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நுண்ணுயியல் மருத்துவ நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் முதல் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 16 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் 16 பேரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த 6 பேருக்கு நேற்றுச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது 5 பேருக்கு தொற்று குறைந்த அளவில் அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பில் மருத்துவ நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸின் ‘இறைபோ நியூக்கிளிக் ’அமிலம் (ஆர்.என்.ஏ.) இருக்கின்றதா? இல்லையா? என்பதைத்தான் பி.சி.ஆர். சோதனை ஊடாகக் கண்டறியலாம். அந்த வைரஸ் உயிருடன் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்கள் விடுவிக்கப்பட முன்னர் இரண்டு தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது ‘இறைபோ நியூக்கிளிக்’ அமிலம் இருக்கின்றதா? இல்லையா? என்பதுதான் பார்க்கப்படும். அது இல்லை என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் தற்போது தொற்றுக் குறைவான அளவில் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடலில் இறந்த வைரஸின் ‘இறைபோ நியூக்கிளிக்’ அமிலம்தான் இருக்கவேண்டும். ஒருவரின் உடலில் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையின் பின்னர் வைரஸ் அழிக்கப்படும்போது அதன் கலங்கள் ஒரேயடியாக வெளியேற்றப்படுவது கிடையாது. படிப்படியாகவே வெளியேற்றப்படும். வைரஸ் உயிருடன் இருக்கின்றதா? இல்லையா? என்பதைக் கண்டறியும் வசதி இலங்கையில் இல்லை” – என்றார்.

‘அப்படியானால் அவர்களின் உடலில் இருப்பது உயிரிழந்த வைரஸ்தான்?’ என்று எப்படிக் கூறுகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

“வேறு நாடுகளில் கொரோனா தொற்று சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இதேபோன்று இறந்த வைரஸ் உடலில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களது சோதனை முடிவுகளுடன் எங்களுடைய சோதனை முடிவுகளும் ஒத்துப் போவதால் இதனைக் கூறுகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், 5 பேருக்கும் கொரோனாவுக்குரிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதுடன் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, “அவர்கள் 5 பேரும் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலிலேயே இருந்தார்கள். தற்போது மேலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தியுள்ளோம். இறந்த கொரோனா வைரஸ் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குப் பரவாது” என்றும் குறிப்பிட்டார்.