ஆயுதப் போராட்டம் குறித்த விமர்சனத்தை திசைமாற்றும் சுமந்திரன்?

sumanthiran press meet
sumanthiran press meet

ஆயுதப் போராட்டம் குறித்து கருத்துக் கூறிய சுமந்திரன்மீது பரவலான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விமர்சனங்களை திசை திருப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களிடையே மாத்திரமின்றி கூட்டமைப்பின் உள்வட்டாரங்களிலும் பெரும் எதிர்ப்பலையை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில் இவை குறித்து கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு சுமந்திரன் இன்று நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இதில் “இம்முறை தேர்தல் வரும்போது பார்ப்போம். மக்கள் மற்றுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்புகின்றனரா? இல்லை வன்முறையற்ற முறையில் போராட்டத்தை நடத்தி செல்ல விரும்புகின்றனரா? என்பதனை தீர்மானிக்கட்டும். வன்முறைதான் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் எனக்கு அவர்கள் வாக்களிக்கக்கூடாது.” என்று சுமந்திரன் கூறியுள்ளமை மக்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மீண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்புகிறீர்களா என குறித்த சிங்களத் தொலைக்காட்சியில் கேட்கப்படவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்றும் அவர்களின் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள என்றுமே கேள்வி தொடுக்கப்பட்டது. இங்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது இதற்கே.

இதற்கு பதில் அளித்த சுமந்திரன் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கும் அருகதை சுமந்திரனுக்கு இல்லை என்றும் அவ்வாறாயின் அவர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் பதவியை பெற்றிருகக்கூடாது என்பதுமே அவர்மீது முன்வைக்கப்பட்ட எதிர்ப்பும் விமர்சனமுமாகும்.

நடைபெற்ற ஆயுதப் போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு போராளிகளையும் அதன் தலைமைத்துவத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக சுமந்திரன் பதில் அளித்திருந்தார். தற்போது அதனை மூடிமறைத்து “மீண்டும் ஆயுதப் போராட்டம்” என புதிய கதையை பேசி தமிழ் மக்களை அபாயத்தில் தள்ளி தேர்தலில் வெல்லும் உபாயங்களை கையாள சுமந்திரன் முயல்கிறார்.

தன்மீதான கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் திசைதிருப்பும் ‘வழக்கறிஞரின் சித்துவிளையாட்டில்’ சுமந்திரன் ஈடுபட்டுள்ளமையை இன்றைய அவரது பேட்டி வெளிப்படுத்துகின்றது. முன்னர் கூறிய தன் கருத்துக்களை மறைக்கும் விதமாக மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை விரும்புபவர்கள் என கேள்வியையும் எதிர்ப்புக்களையும் மடைமாற்ற முயல்கிறார்.

நேர்காணல் வெளியாகி ஒரு வாரம் ஆகும் முன்னரே அதன் கேள்விகளையும் போக்கையும் தனக்காக மாற்றும் ஒருவர், நடந்த விடுதலைப் போராட்டத்தை பற்றி நேர்மையாக பேசுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எவ்வாறெனினும் சுமந்திரன் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தெரிவித்த கருத்துக்களால் தோல்வியை தழுவ நேரிடும என மிக கடுமையாக அச்சமடைந்திருப்பது அப்பட்டமாக தெரிவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.