பஸிலிடம் புலிகள் பணம் வாங்கி ‘டீல்’ செய்தனர்: முன்னணி முக்கியஸ்தர் புதுக்கதை

kandeepan
kandeepan

தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையின் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் பணம் வாங்கி ‘டீல்’ செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி ந. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுமந்திரன் தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினரை வைத்துள்ளதாகவும் புலிகளின் ஆயுதங்களின் பயத்தின் காரணமாகவே அவ்வாறு பாதுகாப்பை வைத்திருப்பதாகவும் அவர் இதன் போது கூறினார்.

அத்துடன் தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய படையினரை வைத்துள்ள சுமந்திரன், மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை விமர்சிக்க அருகதையற்றவர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியமையினால்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம், மற்றும் ரணில் – புலிகள் ஒப்பந்தங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் புலிகளின் ஆயுதத்தால் பிரேமதாசா புலிகளுக்கு பணம் கொடுத்ததாக கூறிய அவர், ஆயுதத்தால்தான் பஸில் ராஜபக்சவுடன் ‘டீல்’ பேசி புலிகளால் பணம் வாங்க முடிந்ததாகவும் புதிய கதை ஒன்றை அவிழ்த்துவிட்டார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது என்பதையும் புலிகளின் செயற்பாடுகள் இப்போது இல்லை என்பதையும் தமிழ் அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுக்கள் நன்றாக வெளிப்படுத்துகின்றன.