இவ்வருடம் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறும் – ஸ்ரீதரன் நம்பிக்கை

download 8
download 8

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை பெற்ற ஆசனத்தை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு வழமையாக மக்களிடம் இருக்கின்ற ஆதரவு குறையவில்லை பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற அரசியல் எங்களுக்கு இல்லை.

நாங்கள் எமது மக்கள் தருகின்ற ஆணையின் பிரகாரம் மக்களுக்காக எங்களால் முடிந்த கோரிக்கைகளை மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

இதிலே தவறான பாதைகளும் உள்ளது இதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்கள் தான்.

இவ்வளவு காலமும் என்ன அடிப்படையில் நடந்துகொண்டோம் தேசிய விடுதலை என்பதை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளை என்னென்ன வழிகள் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நமது தமிழ் மக்களுக்கு புரியும்.

எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எம்மை பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

நாங்கள் கட்டாயமாக கடந்த முறை ஆசனங்களை விட அதிகளவு ஆசனங்கள் எடுக்க வேண்டியுள்ளது எனவே அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள் பற்றிமக்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த ஜனாதிபதியானவர் ராணுவ ஆட்சிக்கு இந்த நாட்டினை கொண்டு வந்துள்ளார் எனவே தேர்தலிலும் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் அவரது செயற்பாடுகள் முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கும் சில வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பை கூட தடை செய்யக் கூடிய நிலை கூடஏற்படும்.

எனவே இந்த ஜனநாயகம் அற்றசெயற்பாடுகளை எதிர்கொள்வதாக இருந்தால் நாம் ஒரு பலமான சக்தியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தால் எதுவும் கிடைக்கும் என நாம் எதிர் பார்க்கவில்லை ஆனால் எமது தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இந்த பாராளுமன்றத்தில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு பெரும்பான்மை முக்கியமானது என்பது எனது கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.