மக்களின் வாழும் உரிமையை அரசாங்கம் மீறிவிட்டதாக மஹிந்த குற்றச்சாட்டு!

r0bgm7qs mahinda rajapaksa afp 625x300 09 November 18
r0bgm7qs mahinda rajapaksa afp 625x300 09 November 18

மக்களின் வாழும் உரிமையை பறித்து, தனது பாரிய கடப்பாட்டை அரசாங்கம் மீறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. ஆனால் ஒரு பள்ளிவாசல் கூட புதிதாக நிர்மாணிக்கப்படவில்லை.

கிந்தொட்டை, திகன, அம்பாறையில் இனப் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, இந்த அரசாங்கத் தரப்பினர் சென்று பார்வையிட்டார்களா? அதனை தடுத்து நிறுத்த ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்தார்களா? எதுவும் இல்லை.

அதாவது, எந்தவொரு இனத்திற்கும், அரசாங்கம் அதன் கடமையை நிறைவேற்றவில்லை என்பதுவே உண்மையாகும். இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக, வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இதிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இன்று எமக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்காதமையினால் ஏற்பட்ட பெறுபேறுகளையே நாம் இன்று அனுபவித்து வருகிறோம். இதனால், மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

இதனை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமெனில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிடுவாரோ எனும் அச்சத்தில்தான் நீதிமன்றுக்கு சென்று, அவர் இலங்கை பிரஜை இல்லை என்றும் கூறினார்கள்” என தெரிவித்துள்ளார்.