அதிகாரத்தில் இருக்கின்ற எவருமே கொரோனா சட்டத்தை மீறமுடியாது -அனில் ஜாசிங்க

Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe
Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமே அதனை மீற முடியாது.என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் தற்போதைய நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொரோனாத் தொற்றுடன் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

குவைத்தில் இருந்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொரோனாத் தொற்றுக்குக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாத வகையில் நாம் செயலாற்றி வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவர்களில் அதிகளவானவர்கள் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகியகால வீசா கொண்டவர்களும் உள்ளனர். எனினும், இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனை செய்த பின்னரே இலங்கைக்கு வர முடியும் என்ற புதிய நிபந்தனைகள் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்குள் கொரோனாத் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறிச் செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ அல்லது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ மட்டுமே உள்ள கடமை அல்ல.

நாட்டிலுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்புடன் செயற்படும் கட்டாயம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது.

ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமே அதனை மீறமுடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” – என்றார்.