முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து

20200607 144458
20200607 144458

காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில்  தீ பரவியுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் பொது மக்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.

இங்கு கொட்டப்பட்டுக் கிடக்கும் திண்மக்கழிவில் தீ பரவியுள்ளது இதன் போது திண்மக்கழிவு முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தியத்திலுள்ள இயந்திரங்களிலும் தீப் பிடித்து எரிந்துள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரையும் தீ வாகனத்தையும் கோரினார்.

இதனையடுத்து அங்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரினால் தீ முற்றாக அணைக்கப்பட்டது.

இங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச் சம்பவத்தை பார்வையிட்டதுடன் ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற் கொண்டனர்.

இந்த தீச் சம்பவத்தினால்  சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக எரிந்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.