அந்நிய சக்திகளின் உளவாளியே ஹூல் – விமலின் கட்சி சாடல்

vimal weeravansa 1
vimal weeravansa 1

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலை நாட்டுக்கு எதிரான அந்நிய சக்திகளின் உளவாளி என்றும், மனநோயாளி என்வும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.

“ரட்ணஜீவன் ஹூல் என்பவர் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படும் சக்திகளுடன் தொடர்பை வைத்துள்ளார். எமது நாட்டு இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம்கூட சென்றிருந்தார்.

பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலேயே அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் தனது மகளை தேர்தல் ஆணைக்குழுவுக்குக்கூட அழைத்துச் சென்றிருந்தார்.

அதேபோல் அரச சார்பற்ற அமைப்புகளின் நிதி பங்களிப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் 52 பேருக்கு கருத்தரங்கொன்றை நடத்துவதற்கு முன்னின்று செயற்பட்டார்.

இலங்கை அரசுக்கு விரோதமாகவும், தேர்தலை நடத்துவதற்கு எதிராகவும் செயற்படும் ஹூல் தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கருத்து வெளியிட்டு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மீது மட்டுமல்ல அரசமைப்பு பேரவை மீதும் அவர் காரி உமிழ்ந்துள்ளார். அப்படி இருந்தும் ஹூலின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடிப்பு செய்யும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் செயற்பட்டு வருகின்றார். மறுபுறத்தில் அரசமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகரும் மௌனம் காத்துவருகிறார்.

ஒன்று ஹூல் என்பவர் நாட்டுக்கு எதிரான உளவாளியாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மனநோயாளியாக இருக்கவேண்டும். அவர் உளவாளி இல்லையேல் உடனடியாக மனநல வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகவும், ஒரு தரப்புக்கு சார்பாகவும் செயற்பட்டால் எப்படி சுயாதீன தேர்தலை எதிர்பார்க்க முடியும். ஆகவே, அந்நிய சக்திகளின் தேவைக்கேற்ப செயற்படும் ஜனநாயக விரோதியான ஹூலுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” – என்று அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.