வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்!

.jpg
.jpg

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

எனவே, அரசியல் தீர்வை வென்றெடுக்க எமது கரங்களைப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் (05) ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தநிலையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய்த் தாக்கத்துக்கு மத்தியில் மிகவும் கஷ்டமான நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்ளவுள்ளோம்.

இந்தக் காலப்பகுதியில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

எம்மிடம் இருக்கும் வாக்குரிமையை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இந்தக் கடமையை எமது தமிழ் மக்கள் கடந்த காலங்களிலிருந்து தவறாது செய்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என்பதை எமது மக்கள் கடந்த தேர்தல்களில் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

இம் முறையும் எமது மக்கள் அவ்வாறு செயற்படுவார்கள். அதில் எமக்கு (100) வீதம் நம்பிக்கை உண்டு.

எனினும், இந்தத் தடவை எமது கரங்களை எமது மக்கள் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, அரசியல் தீர்வை வென்றெடுக்க எமது கரங்களைப் பொதுத்தேர்தலில் எமது மக்கள் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.

வடக்கு – கிழக்கில் அதிக ஆசனங்களை இம்முறை நாம் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய பேரம் பேசும் சக்தியாக நாம் திகழ முடியும். தமிழர்களின் உரிமைகளை அரசிடம் தட்டிக் கேட்க முடியும்” என அவர் கூறியுள்ளார்.